கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெற பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள்
March 24, 2021தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களும் , வர்த்தகர்களும் பின்வரும் சுகாதார நடைமுறைகளை தவறாது பின்பற்றுமாறு யாழ் வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது.
1. வர்த்தக நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்காக மட்டும் ஓரிருவர் வந்து பொருட்களைக் கொள்வனவு செய்தல் சிறந்தது. குடும்பத்துடனோ கூட்டமாகவோ வருவதை முற்றாக தவிர்த்தல் வேண்டும்.
2. வர்த்தக நிலையங்களுக்கு வயது முதிர்ந்தவர்கள் , சிறுவர்களை அழைத்து வருவதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
3.பொருட்கள் கொள்வனவிற்காக வரும் பொதுமக்களை வர்த்தக நிலையங்களில் அதிகளவு நேரம் தாமதப்படுத்துவதைத் தவிர்ப்பதோடு , பொதுமக்களை அதிகளவில் வர்த்தக நிலையங்களில் கூடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
4. வர்த்தக நிலையக் கதவின் கைபிடிகள் உட்பட வர்த்தக நிலையங்களை கிருமியகற்றும் பதார்த்தங்களைப் பயன்படுத்தி அடிக்கடி சுத்தப்படுத்தி அதியுச்ச சுகாதாரத்தினைப் பேணுமாறும் , கொரோனா வைரசிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் வர்த்தர்களையும் , பொதுமக்களையும் யாழ் வணிகர் கழகம் கேட்டுக் கொள்கின்றது.
5.வர்த்தக நிலையங்களின் முன்பகுதியில் பொலித்தீன் அல்லது கண்ணாடி போன்ற பாதுகாப்பு அமைப்புக்களை மேற்கொண்டு தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
6. வீட்டை விட்டு வெளியேறும் போது கட்டாயம் சுத்தமான முகக்கவசத்தை சரியான முறையில் அணிந்து கொள்வதோடு செல்லும் இடங்களில் சமூக இடைவெளியை பேணுமாறு கேட்டுக் கொள்வதுடன் காய்ச்சல் , இருமல் போன்ற கொரோனாவின் அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காது அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
மேற்குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை அனைத்து வர்த்தகர்களும் , பொதுமக்களும் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவ் கொரோனா நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்